தைப்பூசத் திருவிழா
தைப்பூசத் திருவிழா
தமிழ்க் கடவுளான முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச நாளாக உலகெங்கும் உள்ள தமிழர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் வரும் முதல் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் சேர்ந்த நாளில் முருகனுக்கு விழா எடுக்கப்படுகிறது. உலகெங்குமுள்ள முருகப் பெருமானின் திருத்தலங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் பூஜைகளும் நடத்தப்படும்.
அன்னை பராசக்தி மற்றும் சிவபெருமானின் மகனான முருகனின் பிறந்தநாளே தைபூசத் திருநாளாக நம்பப்படுகிறது. ஆதியும் அந்தமுமான சிவபெருமான், பராசக்தியுடன் சேர்ந்து சிதம்பரத்தில் நடனமாடி தரிசனம் செய்த நாளும் தைப்பூச நாளாகும்.
மேலும் தைப்பூசத்தன்றுதான் சுவாமி வள்ளலார் அவர்கள் ஒளியாகினர். அவர் ஒளியான வடலூரில் உள்ள மேட்டுக்குப்பம் என்னும் கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு தைப்பூச விழாவைக் கொண்டாடுவர்.
சிவன் அசுரர்களுக்கு அளித்த வரம் காரணமாக சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகன் ஆகிய மூன்று அசுரர்களும் பல அற்புத சக்திகளை பெற்றனர். ஒரு கட்டத்தில் அவர்கள் தேவர்களை சிறைபிடிக்க தொடங்கினர். இதனால் தேவர்கள் அவர்களுக்கு அஞ்சி மறைந்து வாழும் நிலை உண்டானது. தங்களது இக்கட்டான சூழலை மகாதேவரிடம் தெரிவித்த தேவர்கள், தங்களை எப்படியாவது அசுரர்களிடம் இருந்து காக்கும்படி வேண்டினர்.
அசுரர்களை அழிப்பதற்காக சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீ பிழம்புகளை உருவாகினர். அந்த 6 தீப்பிழம்புகளும் 6 குழந்தைகளாக மாறின. அந்த ஆறு குழந்தைகளும் கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தது. கார்த்திகை பெண்கள் அந்த 6 குழந்தைகளுக்கும் போர் கலை பயற்சி அளித்தனர். பிறகொரு நாள் அன்னை பார்வதி தேவி வந்து தன் 6 புத்திரர்களையும் ஒருசேர அணைக்க, அறுவரும் இணைத்து ஒருவராக மாறினர். ஆறு குழந்தைகளின் சக்தியும், ஆற்றலும், அறிவும் ஒருங்கிணைத்து தோன்றிய முருகன் பல கலைகளில் சிறந்து விளங்கினார்.
அசுரர்களின் பாவக்குடம் நிறைந்து அவர்களின் அழிவுகாலம் வந்த போது பழனியில் ஆண்டிக்கோலத்தில் இருந்த முருகனுக்கு ஞானவேலை கொடுத்தார் அன்னை பார்வதி தேவி. அப்படி அந்த ஞானவேல் கொடுக்கப்பட்ட தினமே தைப்பூச தினமாகும். அந்த ஞானவேல் கொண்டே கந்தன் அசுரவாதம் புரிந்து தேவர்களை காத்தருளினார். அந்த அசுரவாதம் நடந்த இடம் திருச்செந்தூர்.