பொங்கல் / Pongal Festival

பொங்கல் / Pongal Festival


தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை தைத் திங்கள் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தமிழர்களுக்கே மிகவும் சிறப்பான ஒரு நாள். இந்த நாளன்று உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் சாதி, மதம் என்ற எந்த ஒரு வேறுபாடில்லாமல், அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.

பொங்கல் என்பது தமிழர்களால் “தை மாதம் முதல் நாள் தொடங்கி நான்கு நாட்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்படும்” ஒரு தனிப்பெரும் விழா தைப்பொங்கல். இந்த பொங்கல் விழாவானது தமிழர் திருநாளாக உலகம் முழுதுமுள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. உழைக்கும் மக்களின் தேவனாகிய கதிரவனுக்கும், ஏனைய உயிர்களுக்கும் நன்றிசெலுத்தும் விதமாக சூரியப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

போகி பண்டிகை: போகிப்பண்டிகை என்பது பொங்கலுக்கு முதல்நாள் அதாவது மார்கழி கடைசி நாள் தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும். போகிப்பண்டிகையன்று வீட்டை சுத்தம் செய்து, தேவையில்லாத பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகியாகும். போகிப்பண்டிகை கொண்டாடும் மக்கள் தங்கள் வீட்டின் மேற்கூரையில் காப்புக்கட்டுதல் / பூலாப்பூ செருகி வைப்பர்.

தைப்பொங்கல்: தைப்பொங்கல் தைமாதம் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிற பழமொழியும் தமிழர்களால் இன்றுவரை நம்பப்படுகிறது.

மாட்டுப் பொங்கல்: மாட்டுப்பொங்கல் தைமாதம் 2-ம் நாள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலன்று தொழுவத்தில் உள்ள மாடுகளை குளிக்கவைத்து அலங்காரம் செய்து வைக்கப்படும் பொங்கலே மாட்டுபொங்கலாகும். உழவுத்தொழிலுக்கு உதவியாக இருக்கும் “ஆ“வினத்திற்கு நன்றி செலுத்தும் விதமாகவே மாட்டுப்பொங்கல் மாடு வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படுகிறது.

காணும் பொங்கல்: காணும் பொங்கல் தை மாதம் 3-ம் நாள் தமிழர்களால் (முக்கியமாக தமிழ்நாட்டில்) கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலன்று மக்கள் தங்கள் உறவினர்களின் வீட்டிற்குச்சென்று தங்களின் அன்பைப் பகிர்ந்து கொள்வர்.