ஒப்பிலியப்பன் கோவில்
ஒப்பிலியப்பன் கோவில் [திருவிண்ணகரம்]
அருள்மிகு வேங்கடாஜலபதி சுவாமி ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்யதேசத்தில் 16-வது திவ்யதேசமாகும்.
விண்ணகரம் என்றால் விஷ்ணுவின் இருப்பிடம் என்று அர்த்தம். அதனால்தான் திருவிண்ணகரம் என்று போற்றப்படுகிறது.
இங்கு வேண்டிக்கொள்ள தம்பதியர்களுக்குள் மன ஒற்றுமை அதிகரிக்கும், சகிப்புத்தன்மை கூடும் என்பது நம்பிக்கை. ஒருமுறையேனும் ஒப்பிலியப்பன் திருத்தலத்துக்கு வந்து, துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், சகல சம்பத்துகளும் தந்தருள்வார் எம்பெருமாள். துளசியால் அர்ச்சித்து பிரார்த்தித்துக் கொண்டால் அஸ்வமேத யாகம் செய்த பலன்களைக் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
ஒப்பில்லா அப்பனான ஒப்பிலியப்பனை வணங்குங்கள். ஒளிமயமான எதிர்காலத்தைத் தந்திடுவார்!
வரலாறு :
மிருகண்டு முனிவரின் மகனான மார்க்கண்டேயர், துளசி வனமான இத்தலத்தில் வசித்து வந்தார். அவருக்கு லட்சுமி தேவியை தனது மகளாகவும் நாராயணரை மருமகனாகவும் அடைய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. இதற்காக அவர் இங்கு ஒரு திருத்துழாய் செடியின் அடியில் அமர்ந்து கடும் தவம் இருந்தார். அவரது தவத்தை கண்டு மனம் மகிழ்ந்த பெருமாள் லட்சுமியை நோக்கி தேவி நீ சென்று மார்க்கண்டேயருக்கு மகளாக இரு, தக்க நேரத்தில் நான் வந்து உன்னுடன் உறைவேன் என்றார். அதன்படி லட்சுமிதேவி சிறு குழந்தையாக பூமிதேவியாக அவதரித்து துளசி வனத்தை அடைந்தாள். மார்க்கண்டேயர் மனம் மகிழ்ந்து அந்த குழந்தையை எடுத்து வளர்த்து வந்தார். சில ஆண்டுகள் சென்றதும் பூமிதேவி பருவ மங்கையாக திகழ்ந்தாள். எல்லா வகையிலும் ஒத்த மணமகனை தேடி நின்றார். இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் ஸ்ரீஒப்பிலியப்பன், ஸ்ரீபூமிதேவியை மணக்க விரும்பி பெண் கேட்டு மார்க்கண்டேயர் முனிவரிடம் செல்லும் பொழுது, “மார்க்கண்டேயர் முனிவர் என் பெண்ணோ சின்ன குழந்தை, 5 வயது கூட நிரம்பாதவள், அவளுக்கு உப்பு போட்டு கூட சமைக்கத் தெரியாது” என கூற அதற்கு பெருமாள் ஸ்ரீஒப்பிலியப்பன், “தாங்கள் பெண் உப்பில்லாமல் சமைத்தாலும் அதனை அமிர்தம் போல் ஏற்றுக் கொள்வேன்” என கூறியதால் இன்றும் இக்கோவிலில் பெருமாளுக்கு உப்பு இல்லாமலே சகல நைவேத்தியங்களும் செய்யப்படுகின்றன.
மேலும் மகாவிஷ்ணு விண்ணுலகில் இருந்து இத்தலத்தை விரும்பி இங்கு வந்து தோன்றியதால் இத்தலம் திருவிண்ணகரம் என்றும், பூமிதேவி துளசிவனத்தில் அவதரித்ததால் துளசிவனம் என்றும், மார்க்கண்டேயர் தவம் இருந்து ஸ்ரீ பூமிதேவியை மகளாக பெற்று திருமாலுக்கு கன்னிகாதானம் செய்து வைத்ததால் மார்க்கண்டேயர் ஷேத்ரம் எனவும் , ஆகாச நகரம் வைகுண்ட நகரம் திருவிண்ணகர் ஒப்பிலியப்பன்ஸந்நிதி உப்பிலியப்பன் ஸந்நிதி முதலிய பெயர்களால் வழங்கப்படுகிறதுபோற்றப்படுகிறது..
இத்திருக்கோவிலில் உப்பு இல்லாமல் இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் பிரசாதங்களை கோவிலுக்குள்ளேயே சாப்பிட்டால் உப்பிட்டது போல் இருக்கும்”. அதே பிரசாதத்தினை கோவிலுக்கு வெளியே சென்று சாப்பிட்டால் உப்பு இல்லாமல் இருப்பது போல் இருக்கும் என்பதை பக்தர்கள் கண்கூடாக உணரலாம்.
சிறப்பு தினம் :
எம்பெருமான் ஒரு பங்குனி மாதத்தில் ஏகாதசி கூடிய திருவோண நக்ஷத்திரத்தில் பகல் 12.00 மணிக்கு இத்தலத்தில் அவதரித்தான்”. இந்த அவதார தினத்தில் திருத்தேருடன் ஒன்பது நாள் ப்ரஹ்மோத்ஸவம் ஆண்டுதோறும் நடக்கின்றது.
எம்பெருமான் பூமிப்பிராட்டியை ஐப்பசி மாதத்தில் திருவோணத்தன்று மணந்து கொண்டான். ஆண்டுதோறும் ஐப்பசி திருவோணத்தில் திருக்கல்யாண உற்சவம் தொடங்கி, பல்வகை இசை நிகழ்ச்சிகளுடன் 12 நாட்கள் நடந்து வருகிறது.
ஒவ்வொரு மாதம் வருகின்ற சிரவணத் திருநாட்களில் ஆயிரக்கணக்கான சேவார்த்திகள் வருகை தந்து பெருமாளின் அவதார நட்சத்திர நன்னாளில் பெருமாளைச் சேவித்து மூவகை தீபம் கொண்ட சிரவண தீபம் தரிசித்து செல்கின்றனர்.