திருவோண விரதம்

திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். நீங்காத செல்வம் நிலைத்து நிற்கும்.

திருவோண விரதம் வரலாறு

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம். மகாவிஷ்ணுவின் மீது பக்தி கொண்ட அசுரர்களின் தலைவராக இருந்தவர் மகாபலி சக்கரவர்த்தி. அவர் மிகப்பெரிய யாகம் செய்த பலருக்கும் தானம் செய்ய முன்வந்தார்.

இதனால் மகாபலியின் சக்தியும் அசுர குலத்தின் பலமும் அதிகரிக்கும் என்று அஞ்சிய தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தனர். இதையடுத்து விஷ்ணு, வாமனராக குள்ளமான உருவம் கொண்டு மகாபலி சக்கரவர்த்தி தானம் வழங்கும் இடத்திற்குச் சென்றார். பின்னர் அங்கிருந்த மகாபலியிடம் தனக்கு மூன்றடி மண் மட்டும் தரும்படி கேட்டார். மகாபலி அதற்கு ஒப்புக்கொண்டார்.

அப்போது மிகப்பெரிய உருவம் கொண்ட வாமனர், தன்னுடைய காலால் முதலில் பூமியை அளந்தார். இரண்டாவது அடியில் வானத்தையும் அளந்து முடித்தார். மூன்றாவது அடியை வைப்பதற்கு இடம் இல்லை. “மூன்றாவது அடியை எங்கே வைப்பது?” என்று மகாபலியிடம் கேட்டார்.

அதற்கு மகாபலி, தன்னுடைய தலையில் வைக்கும்படி கூறினார். அவரது தலையில் தன் காலை வைத்து பாதாளத்திற்குள் அழுத்தினார் வாமனர். பின்னர் அவருக்கு அருள்புரியும் விதமாக, பாதாள உலகத்தில் இருந்து அரசாட்சி செய்து வரும்படி பணித்தார்.

மகாபலியை, வாமனர் ஆட்கொண்ட தினம் ஆவணி மாதம் திருவோணம் ஆகும். அன்றைய தினம் மகாபலி மன்னன், தன்மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா? என்பதை பார்ப்பதற்காக பாதாள லோகத்தில் இருந்து கேரளாவுக்கு வருவதாக ஐதீகம். இதை நினைவு கூறும் வகையிலும், மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், ஓணம் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாபலி மன்னனின் வருகைக்காக இந்த திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 10-வது நாளாக திருவோணம் தினம் கேரளாவில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மக்கள் வீடுகளை அலங்கரித்து திருவிளக்கேற்றி வழிபடுவார்கள். கும்மியடித்து மகிழ்வர். எல்லா கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

பக்தி பாடல்களை பாடி, பிரார்த்தனை செய்வர். குடும்ப பெரியவர்கள் புத்தாடைகளை வழங்க, அதை குடும்பத்தில் உள்ளவர்கள் பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கி பெற்று அணிந்து மகிழ்வர். ஓணம் அன்று சிறப்பான உணவு வகைகளை சமைத்து உறவினர்களுடன் உண்டு மகிழ்வார்கள். அன்றைய விருந்தில் அடப்பிரசாதம் என்னும் ஸ்பெஷல் பாயசம் இடம் பெறும். இளைஞர்கள் வாண வேடிக்கை செய்து மகிழ்வர். அன்று மாலை கேரளாவில் ‘செண்டை’ என்று அழைக்கப்படும் கேரள பாரம்பரிய மேள தாளத்துடன் புலி ஆட்டம், சிங்காரி மேளம், கதகளி நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பாம்பு போன்ற நீண்ட படகுப்போட்டி என பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெறும்.

கேரள மக்கள் எங்கிருந்தாலும் கொண்டாடி மகிழும் பண்டிகை ஓணம் பண்டிகை ஆகும். திருவோணத்தன்று பெருமாள் பக்தர்கள் விரதம் இருப்பார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் திருவோணத்துக்கு முதல் நாள் இரவு உணவை தவிர்க்க வேண்டும். ஓணம் பண்டிகையின் போது மகா விஷ்ணுவை வணங்கி துதிப் பாடல்கள் பாட வேண்டும். விஷ்ணு புராணங்களை படிக்கலாம். சுவாமிக்கு நிவேதித்தப் பொருட் களை ஒரு பொழுது சாப்பிடலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். அன்று வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு பலன்களை தரும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருவோணத்தன்று தீபம் ஏற்றப்படும். இதை சாஸ்ரதீப அலங்கார சேவை என்பர். அன்று ஏழுமாலையானின் உற்சவரான மலையப்பசாமி ஊர்வலமாக 4 மாடங்கள் வழியாக ஊஞ்சல் மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அங்கு ஆயிரத்தெட்டு திரிகளை கொண்ட நெய் விளக்கு ஏற்றப்படும். அப்போது திருமலையே ஜோதி மயமாக காட்சி தரும்.

திருவோண விரதம் எப்படி இருப்பது?

மாதா மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தை முன்கூட்டியே குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே உணவேதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அன்று இரவில் பெருமாள் மந்திரங்களை உச்சரிப்பது, விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் கொடுக்கும். மறுநாள் அதிகாலையில் எழுந்து சுத்தமாக நீராடி நல்ல உடை உடுத்திக் கொண்டு பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை அறையில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும். பூஜையில் துளசி தீர்த்தம் வைத்து அந்த தீர்த்தத்தை நீங்கள் பருகலாம்.

மதியம் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் உப்பு சேர்க்கக்கூடாது. உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டால் ஒப்பிலியப்பன் பெருமானின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. உப்பு சேர்க்காமல் உணவு தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மாலையில் நெய்விளக்கு ஏற்றி பெருமாளுக்கு மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்யுங்கள். இரவில் பால் மற்றும் பழம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

இவ்விரதத்தை பக்தி சிரத்தையுடன் கடைப்பிடித்து காலையில் வழிபாடு செய்யும் பொழுது நோய்கள் அனைத்தும் குணமாகும். மதிய வழிபாடு செய்யும் பொழுது செல்வம் அத்தனையும் பெருகும். மாலையில் வழிபாடு செய்யும் பொழுது செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். இரவில் இறுதியாக நான்காம் ஜாம வழிபாடு செய்யும் பொழுது முக்தி பேறு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே இவ்வாறு திருவோண விரதத்தை முறையாக கடைபிடித்தால் ஏழேழு பிறவிக்கும் 16 செல்வங்களும் அடையலாம்.