சஸ்திர பந்தம்
சஸ்திர பந்தம்
வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா
மாலைபூ ணேமதிற மால்வலர்தே – சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வாபாதந் தாவேல வா.
பொருள்
இந்தப் பாடலின் பொருள், `தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே… பேரின்பமெனும் அனுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன்னெ னத் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே… என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும் ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க… திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க…’ என்பதாகும்.
பாடலாகப் பாடி அருள் பெறும் அதே வேளையில் இதை வேல் போல வரைந்து அதைக்கண்டு தொழுதுகொள்ளும்போது, தமிழின் வடிவாக முருகனை வணங்கும் பேறும் பக்தர்களுக்குக் கிடைக்கிறது. இதைப் பாராயணம் செய்வதன் மூலம், தொழிலில் சிறப்பு, செல்வச் செழிப்பு, நோய்கள் தீர்தல், ஞானம் அடைதல் ஆகியன விரைவில் கைகூடும் என்று சொல்கிறார்கள் அடியவர்கள்.
பாராயணம் செய்யும் முறை
சஸ்திர பந்தத்தைப் பாராயணம் செய்யும் முறையினையும் அடியார்கள் வகுத்துள்ளனர். முதலில் ஞானசம்பந்தர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் போன்ற குருமார்களை வணங்கிவிட்டு சஸ்திர பந்தத்தைப் பாராயணம் செய்யத் தொடங்கவேண்டும்.
முதன்முதலில் பாராயணம் செய்யத் தொடங்குவது, செவ்வாய்க் கிழமை, கிருத்திகை, விசாகம் நட்சத்திரம், சஷ்டி ஆகிய முருகனுக்கு உகந்த தினங்களில் முருகப் பெருமானின் சந்நிதிகளில் தொடங்குவது நல்லது. முதன்முறை செய்யும்போது 27 முறை பாராயணம் செய்யவேண்டும்.
வீட்டில் வைத்தும், முருகன் விக்கிரகம் அல்லது படத்திற்கு முன்பு வைத்து பாராயணம் செய்யலாம். வேலுக்குப் பூஜை செய்து தொடங்குவது விசேஷம். இவ்வாறு தொடர்ந்து பாராயணம் செய்துவர, வலிமையான மந்திர சக்தி உருவாகும். எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை சக்தி பெருகும் என்பது நம்பிக்கை.
முருகப்பெருமானைத் தன் வாழ்நாளெல்லாம் வழிபட்டுப் பேறுபெற்ற பாம்பன் சுவாமி . அவரது ஜீவசமாதி அமைந்திருக்கும், திருவான்மியூர் திருக்கோயிலில் சஸ்திர பாராயணம் செய்து குருவருளையும் திருவருளையும் பெறலாம்.