Karthikai deepam / திருக்கார்த்திகை
திருக்கார்த்திகை / கார்த்திகை வழிபாடு / தீபத் திருநாள்
கார்த்திகை திருநாள் கார்த்திகை மாதம் கிருத்திகா நட்சத்திரத்தில் கார்த்திகை கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை திருநாளன்று வீடுகள் தோறும் அகல் விளக்கால் அலங்கரிக்கப்படும். இந்த நாளன்று நெல் பொரியும், அவல் பொரியும் வெல்லப்பாகிலிட்டு பரம்பொருளான சிவ பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கம்.
கார்த்திகை விழாவைக் குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடுவர்.
குமராலய தீபம்
முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள்.
விஷ்ணுவாலய தீபம்
விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள்.
சர்வாலய தீபம்
ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.
ஐதீகம்
படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
திருவண்ணாமலை கார்த்திகை விளக்கீடு
காலையில் பரணி தீபம் ஏற்றியவுடன், மாலை மலையில் இத்தீபம் ஏற்றப்படும். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாக நின்றார் என்ற ஐதிகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது தீபம் ஏற்ற செம்பு, இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர். இத்தீபம் ஏற்றச் சுமார் 3000 கிலோ மேற்பட்ட நெய்யும்,1000 மீட்டர் காட துணியும் கொண்டு ஏற்றப்படுகிறது.
விரதம் இருக்கும் முறை
இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்
தீபம் ஏற்றும் முறை
திருக்கார்த்திகை திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.
தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது.